Friday, March 24, 2017

கோல மஹரிஷி தவம் செய்த கோலாப்புரம் !


பாஸ்வத் ரத்னாபரண வஸநாலங்க்ருதே சாருஹஸ்தை:
ஸங்கம் சக்ரம் வரதமபயம் ஸம்வஹந்தி த்ரிநேத்ரி
ஹேமப்ரக்யே ப்ரணதவரஸந்தாத்ரி பத்மாஸனஸ்த்தே 
காருண்யாத்ரே பகவதி மூகாம்பிகே மாம் ரக்ஷ நித்யம்


கிருத யுகத்திலிருந்தே மிகுந்த புனித்தத்தோடு விளங்குற திருத்தலம் கோலாப்புரி (இன்றைய கொல்லூர்). உலகிலேயே பழமையான மலையாக மேற்குத் தொடர்ச்சி மலை கருதப்படுகிறது. அதன் உட்பிரிவே குடஜாத்ரி என்ற புனிதமலை. இராமாயணக் காலத்தில், மருந்து மலையான சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு வந்தாரில்லையா ஆஞ்சநேயர், அப்போது அதிலிருந்து ஒரு பகுதி கீழே விழுந்துவிட்டது; அவ்வாறு விழுந்த பகுதி மலையாக அமைந்துவிட்டது. சஞ்சீவி மூலிகைக்கு குடஜா என்றும் பெயருண்டு. குடஜா இருக்கும் மலையானதால், அந்த மலை குடஜாத்ரி என்று பெயர் பெற்றது. இதில் 64 வகை மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் உள்ளன.

குடஜாத்ரி மலையிலிருந்து 64 நீர்வீழ்ச்சிகள் தனித்தனியாக உருவாகி, பின்னர் அவை ஒருங்கிணைந்து சௌபர்ணிகா நதியாக உருவெடுத்துப் பாய்கிறது. சௌபர்ணன் கருடன் தவம் செய்து தன் வம்சத்தில் ஏற்பட்டிருந்த கொடிய சாபங்களையும் தோஷங்களையும் போக்கிக் கொண்ட நதி தீரம் செளபர்ணிகா என்றும் பாவநாசினி என்றும் வழங்கப்படுகிறது. அந்த சௌபர்ணிகை நதியிலிருந்து கிளை பிரிந்து அதன் வாரிசாக வளைந்தோடுகிறது அக்னி தீர்த்த நதி. அதன் கரையோரத்தில் அமைந்துள்ளது மஹாரேண்யவனம்.

ஒரு முறை இந்தப் பகுதிக்குப் பாத யாத்திரையாக வந்தார் கோலமகரிஷி. இதன் அமைதியான சூழல் அவருக்குப் பிடித்துப் போக, அங்கேயே ஆசிரமம் அமைத்து வழிபட்டு வந்தார், கோலமஹரிஷி. அந்த கானகத்தின் கடுமைகளைக் கணமேனும் பொருட்படுத்தாமல், பரமேஸ்வராளை நினைத்து கடுந்தவம் இயற்றினார், கோலமகரிஷி. அவருடைய பக்திக்கு மெச்சிய பரமேஸ்வரன் நேரில் காட்சியளித்தார்.

வேண்டும் வரம் அருள விழைந்தார் ஈசன். உடனே, கோலமஹரிஷி ''ஈசா..எனக்கு தரிசனம் தந்தருளிய இத்தலத்தில் மும்மூர்த்திகளும் பராசக்தியுடன் இங்கு வாசம் புரிய வேண்டும்'' என்று பிரார்த்தித்தார். மொத்ததில் தேவலோகத்தையே மண்ணுக்குக் கொண்டு வர முனிவர் ஆசைப்படுவதை உணர்ந்த ஈசன், அரியதொரு சுயம்புலிங்கத்தை அந்த இடத்தில் தோற்றுவித்து, அதில் ஸ்ரீசக்ரத்தை பதித்தார்.  லிங்கத்தின் மத்தியில் ஸ்வர்ண ரேகை ஒன்றும் இருந்தது. ''முனிவரே, ஸ்வர்ண ரேகையின் இடப்புறம் துர்கா, லட்சுமி, சரஸ்வதி சாந்நித்யமும், வலப்புறம் ருத்ரன், நாராயணன், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் சாந்நித்யமும் இருப்பதால், எங்களுடன் முப்பத்து முக்கோடித் தேவர்களும் இந்த லிங்கத்தில் குடியேறுவார்கள்'' என்று ஈசன் அருளினான்.

மேலும், அம்பிகையின் திருமந்திரத்தை உபதேசித்து, மஹா வைஷ்ணவியாகவும், மஹாசாரதையாகவும் விளங்குகிற மஹாஜனனியை நினைத்து தவம் இருக்க சொன்னார். அதன்படியே, கோலமஹரிஷியும் மந்திரம் ஓதி வழிபட்டு வந்தார்.

கோல மகரிஷியால் புகழ் பெற்ற அந்த ஸ்தலம் கோலாபுரம் என அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி கொல்லூர் ஆனது.


மஹாரேண்யபுரமே தந்த புராணம் கூறும் தவவனமே
மன வினாவிடை பெரும் திருத்தலமே
வினாவிடை பெரும் திருத்தலமே
உள் விகாரம் அகற்ற வேண்டுமே என
மகேஸ்வரன் தாளை வணங்கி
கோலமகரிஷி தவம் செய்ய துவங்கி
தன்னை உபாசனை செய்த காரணத்தை
அந்த உமாபதிக் கேட்டு மனமிரங்கி
உபாசனை செய்த காரணத்தை
அந்த உமாபதிக் கேட்டு மனமிரங்கி

சுயம்புவான ஜோதி லிங்கத்தை
சுடர்விடும் ஒளியுடன் அமைத்து
அதில் ஸ்ரீசக்ரத்தை பதித்து
மேதினியெல்லாம் மேன்மையுரும் படி
மெஞ்ஞான நிலையில் லயித்து
நீ அல்லும் பகலும் துதித்து
அழைத்தால் வருவாள் அருள்வாள் சித்தி
லக்ஷ்மி ரூபத்தில் சக்தி
மஹாலக்ஷ்மி ரூபத்தில் சக்தி
என சிவனார் அருளிச் சென்றார்
மாமுனியார் தவத்தில் நின்றார்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

காலம் பல சென்றும் ஞாலம் மறவாது
கோலமுனிவரின் நினைவோடு
கோலாபுரம் என்றும் கொல்லூர் தலம் என்றும்


காரணப் பெயர் சூட்டி அழைக்கின்றது

(தொடர்ந்து தரிசிப்போம்..)

No comments:

Post a Comment